வனவளத் திணைக்கள அதிகாரிக்கு எதிரான செய்தி பொய்யானது – பொது அமைப்புக்கள்

குமுழமுனை வன அதிகாரி தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று குமுழமுனை பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக குமுழமுனை பொது அமைப்புக்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 07.10.2020 அன்று குமுழமுனையில் இடம்பெறும் முறிப்பு , முள்ளியவளை , முல்லைத்தீவில் வசிக்கும் ஒரு தனி நபரது றவுடித்தனத்தையும் அவருடன் சேரந்து இயங்கும் ஒருசில பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பாகவுமே நாம் முறையிட்டு இருந்தோம். அதன் பிரதியும் தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைத்துள்ளோம்.

ஆனால், லங்காசுடர் மற்றும் உதயன் பத்திரிகைகள் செய்தியை ஆராயாது களவுக்கு துணை போகும் பக்கத்தினரது பொய்யான செய்தியை பிரசுரித்து நேர்மையாகவும் விசுவாசமாகவும் வேலைசெய்யும் ஒரு அதிகாரிக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளது.

வனத்துறையில் வேலை செய்யும் இலஞ்சம், மரக்கடத்தலில் முன்னின்று செயற்பட்டு பொதுமக்களாலும் அரச அதிகாரிகளாலும் பெயர் கூறி முறையிட்டும் அவர் சிங்கள இனத்தவர் என்பதாலும் மாவட்ட வன அதிகாரியின் நண்பர் என்பதாலும் இன்றுவரை எதுவித விசாரணைகளையும் அவர்மீது திணைக்களம் மேற்கொள்ளாத நிலையில் குமுழமுனையில் அலுவலகம் அமைத்து காட்டிலையே வாழ்ந்து காட்டை பாதுகாக்க தன்னை அர்ப்பணித்துள்ள இளம் அதிகாரி மீது போலியாக நடவடிக்கைகளை செய்து எதுவித குற்றமும் காணமுடியாத நிலையில் இறுதியில் ஊடகங்கள் வாயிலாக அவரை தூசிப்பதையும் அவரது நற்கடமையை கொச்சைப்படுத்துவதையும் கிராம மக்களாகிய நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

எனவே, இதனை ஒருகுரலாக வெளிப்படுத்தி எமக்கு நியாயம் கிடைக்கும் வரை ஊடகங்கள் உண்மையை கூறி எமக்கு பக்கபலமாக செய்தியினை சுயாதீனத்தன்மை பாதிக்காது மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று தயவாக வேண்டுகின்றோம் என அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.