இலங்கை மின்சாரத்துறையின் துரித அபிவிருத்திக்கு ரஷ்யா ஒத்துழைப்பு!

இலங்கை மின்சாரத்துறையின் துரித அபிவிருத்திக்காக ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் தயாராகவுள்ளது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரிமதேரி அவர்கள் தெரிவித்தார்.

மின்சார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூரினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

ரஷ்ய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியனவற்றை மென்மேலும் பலப்படுத்துவதற்காக வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரத்துறையின் அபிவிருத்திக்காக அணுசக்தி தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றதோடு ரஷ்யநாட்டு அணுசக்தி ஆணைக்குழு மூலம் இலங்கை மின்சார சபைக்கு அறிவுப் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தமது நாடு தயாராகவுள்ளது என்றும் ரஷ்ய நாட்டுத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

திடமான அபிவிருத்தி நோக்கங்களுக்கமைய செயற்படும் தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சாரத்துறையில் நடாத்துவதற்கு மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ரஷ்ய தூதுவரை இங்கு நினைவுபடுத்திய மின்சார அமைச்சர் டலஸ் அழகப்பெரும மீள் பிறப்பாக்க சக்தியினூடாக மின்சார உற்பத்தியின் தேவையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கை மின்சாரத்துறையின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக முன்வந்தமை தொடர்பாக தமது நன்றியினையும் தெரிவித்தார்.