ஊடகங்களில் செய்தி வெளியானதாலேயே ரிஷாட் தப்பினார் – கமால் குணரட்ண

ரிஷாட் கைது செய்யப்படயிருந்த நேரத்தில் ஊடகங்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டதால் ஊடகங்கள் அதனை செய்தியாக்கி மக்களுக்கு தெரிவித்தன. ரிஷாட் பதியுதீனிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னரே அவரை கைதுசெய்யும் நடைமுறையை பின்பற்றவிருந்தோம். எனினும் அவர் கைது செய்யப்படவுள்ளார் என்றசெய்தி வெளியானதும் தப்பி தலைமறைவாகிவிட்டார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண
குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்படுவார் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவரை கைதுசெய்வதற்கான கால அவகாசத்தை பொதுமக்கள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களை பார்க்கும் ரிஷாட் பதியுதீன் இன்னமும் கைதுசெய்யப்படாதமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி விமர்சிக்கப்படுவதுடன், காவல்துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் குற்றம் சாட்டப்படுகின்றனர். என்னையும் குற்றம் சாட்டுகின்றனர் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் இந்த நாட்டு மக்களே எங்களை விமர்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவது தாமதமாவது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர், அல்லது அவர்கள் தங்களதும் நாட்டினதும் பாதுகாப்பு குறித்து கவலையடைந்திருக்கலாம் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களது கரிசனைகளை புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் இந்த கைதுகளை முன்னெடுக்கும்போது காவல்துறையினர் முன்னெடுக்கவேண்டிய பொறிமுறைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் திறமைசாலிகள் என்ற போதிலும் அவர்களிடமிருந்து தப்பி மறைந்திருக்க தீர்மானிப்பவர்களை உடனடியாக அவர்களால் கைதுசெய்ய முடியாது. அவர்களை சில மணிநேரங்களில் சில நாட்களில் கைது செய்யமுடியும் எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்