யாழ் மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு விரைவில் தீர்வு

jaffnamedicalfacultry 800x417 1
jaffnamedicalfacultry 800x417 1

யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தினை மேலும் செழுமைப்படுத்துவற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், வடக்கின் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முன்வைத்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை(16.10.2020) கல்வி அமைச்சரை சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கலந்துரையாடப்பட்ட போதே குறித்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நல்லாட்சி என்று சொல்லப்பட்ட ஐ.தே.க. – கூட்டமைப்பு இணைந்த கூட்டாட்சி காலத்தில் நடைபெற்ற அதிபர் சேவை தரம் – 3 இற்கான ஆட்சேர்ப்பின் போது முறைகேடு இடம் பெற்றுள்ளதாகவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற நியமங்களுக்கு மாறாக தெரிவுகள் இடம்பெற்ற நிலையில், சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் பாதிக்கபட்டவர்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

அதேபோன்று, கடந்த காலங்களில் சேவை அடிப்படையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் கடமையாற்றி வருகின்ற அதிகாரிகளை, இலங்கை கல்வி நிர்வாகச் சேவை தரம் – 03 இனுள் உள்வாங்குவதற்கான நேர்காணல் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதிலும், இதுவரை உள்வாங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுடைய எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றித் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மற்றும், யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தை செழுமைப்படுத்துவற்கான உட்கட்டுமானங்கள் மற்றும் உபகரணங்களுக்கு உதவியளிப்பதற்கு ஒஸ்ரியா மற்றும் இந்திய போன்ற நாடுகளும் லைக்கா போன்ற தனியார் நிறுவனங்களும் முன்வந்துள்ள நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய அனுமதிகளை பெற்றுத் தருமாறு யாழ். மருத்துவ பீடத்தின் துறைத் தலைவர் வைத்திய கலாநிதி எஸ். ரவிராஜ் அவர்களினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கபட்டிருந்தது.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கொண்டு செல்லப்பட்ட கோரிக்ககைகளை சாதகமாக பரிசீப்பதாக உத்தரவாதமளித்த கல்வி அமைச்சர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.