இந்திய வீடமைப்புத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம் – ஜீவன் தொண்டமான்

747
747

இந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

“பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறை சார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தோட்டப் பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவு புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்ணான்டோ எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர், நாம் மௌனம் காக்கவில்லை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்த தொகை பெற்றுக் கொடுக்கப்படும். மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை.

அதேவேளை, பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவிக்கும் கலாச்சாரத்தையும் நாம் குறைத்துக் கொள்வோம். அரசியல் வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை குழந்தைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் கோபமடையப் போவதில்லை.

மலையகத்தில் தான் வீட்டுப்பிரச்சினை இருக்கின்றது, எமது மக்களுக்கு இன்னும் நிலவுரிமை இல்லை, அந்த உரிமையை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் வீடுகளை கட்டிக்கொள்வார்கள், இந்தியாவின் 10ஆயிரம் வீட்டுத்திட்டம் நவம்பரில் ஆரம்பிக்கப்படும், 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் வீடுகளை கட்ட முடிந்தால் மீதமுள்ள 2 இலட்சம் பேருக்கு என்ன செய்வது, எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கினால் வெளிநாடுகளில் உள்ளவர்களாவது வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” -என குறிப்பிட்டுள்ளார்.