மக்களின் எதிர்பார்ப்பை 20 ஆவது அரசியல் அமைப்பு செயற்படுத்தும் – காதர் மஸ்தான்

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற 20 ஆவது அரசியல் அமைப்பு செயல்படுத்தும். எனது ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச்செயலக வளாகத்தில் இன்று (19) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர் காலத்தில் நிலையாக இடம்பெறவேண்டும் என்ற வகையில் ஜனாதிபதி என்னை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.

மேலும், எனக்கு பணிப்புரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் எதிர்காலத்தில் நல்ல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

தற்போதைய அரசாங்கம் மன்னார் மாவட்டத்தில் விரைவான சில அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளேன்.

யாரும் பாதிக்கப்படாமல் எவ்வித பாகுபாடுகளும் இன்றி இன,மத வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் இன்றி இப்பகுதிகளின் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்.

மாவட்டத்தில் விவசாயம் , மீன் பிடி ,கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகள் விரைவாக தீர்த்துவைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அமைவாக மாவட்டத்தில் உரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதே வேளை கொரோனா தொற்று காரணமாக பாதீக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிதி உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து வெளி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு குறித்த நிதி வழங்கப்படவில்லை.

சில பிரச்சினைகள் காரணமாக குறித்த நிதியை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிதி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஒரு தரப்பினரால் குறித்த பணம் மக்ளுக்கு கிடைக்காது என கூறப்பட்டது. ஆனால் குறித்த நிதி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த நிதி இடம் பெயர்ந்த மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் சமுத்தி அதிகாரிகளின் முயற்சியினால் குறித்த நிதியை பெற்றுக்கொள்ள இலகுவாக இருந்தது. இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் மீள் குடியேறுவதாக இருந்தால் அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின் வெளிநாடுகளின் உதவியுடன் மக்களின் மீள் குடியேற்றத்தை மேற்கொண்டு இருக்க முடியும்.

ஏன் அந்த காலத்தில் இருந்தவர்கள் இதனை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. அவர்களினால் முடியாததை எதிர் காலத்தில் என்னால் மேற்கொள்ளமுடியும். எதிர் காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் இடம் பெறும்.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை மாற்றுவோம் என்று கூறினார்கள். அவர்கள் கூறியதற்கு அமைவாகவே சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அரசியல் அமைப்பு திருத்தத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்கள் ஆணை வழங்கி உள்ளனர்.

19 ஐ மாற்றி 18 ஐ கொண்டு வருவோம் என்று கூறியது தான் தற்போது நடக்கின்றது. நாட்டில் பல்வேறு நல்ல விடையங்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக சில மத தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக எமது உயர் தலைவர்களுடன் கலந்துரையாடி திருத்தங்கள் எதனையும் மேற்கொண்டு மக்கள் பயணடையக்கூடிய வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மக்களுக்கு உதவித்திட்டங்கள், அபிவிருத்தி பணிகள் விரைவாக சென்றடைய வேண்டும் என்பதே ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் எதிர்பார்ப்பு.

அதற்கு அமைவாகவே அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ளுகின்றோம். இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

மக்களின் எதிர் பார்ப்பை நிறை வேற்ற 20 ஆவது அரசியல் அமைப்பு செயல் படுத்தும். எனது ஆதரவும் அவர்களுக்கு இருக்கும் என தெரிவித்திருந்தார்.