ரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை – உதய கம்மன்பில

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 8

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப் படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இணையவழி மூலம் இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இணை பேச்சாளர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில் , 

கேள்வி : 20 இற்கு ஆதரவாக ரிஷாத் தரப்பினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே ரிஷாத் பதியுதீனுடைய கைது அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு ? 

பதில் : அது போலியான தகவலாகும். ரிஷாத் பதியுதீனை கைது செய்யுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரோ கூறவில்லை. சட்டமாஅதிபரின் ஆலோசனைக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரை தற்போதைய  எதிர்க்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. எனவே ரிஷாத்துடைய கைதில் ஏதேனும் சதித்திட்டம் காணப்படுமாயின் அது எதிர்கட்சியின் சதியாகவே இருக்கும். 

கேள்வி : யாருடைய அழுத்தத்திற்கமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது ? 

பதில் : 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி சட்டமா அதிபரையும் பொலிஸ்மா அதிபரையும் அரசியலமைப்பு பேரவையே நியமிக்கிறது. மாறாக ஜனாதிபதியோ , பிரதமரோ அமைச்சரோ அல்ல. எனவே இந்த கைது விடயத்தில் அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்றார்