மன்னார் நகர சபையின் 32 ஆவது அமர்விற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

மன்னார் நகர சபையின் 31 ஆவது அமர்வு கடந்த மாதம் இடம் பெற்ற போது, கொண்டு வரப்படுகின்ற தீர்மானம் மன்னார் நகர சபையினால் நிறைவேற்றப்பட்டு நடை முறைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அன்றைய தினம் சபை அமர்வில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

அன்றைய தினம் சபை அமர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் செய்தியை முழுமையாக வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் உண்மை நிலை மக்களை சென்றடைந்துள்ள நிலையில் மன்னார் நகர சபையின் 32 ஆவது அமர்வு இன்று (21) நகர சபையின் தலைவர் தலைமையில் இடம் பெற்றுவருகின்றபோது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் கடந்த அமர்வுகளின் போதும் நகர சபையின் தலைவரினால் சபைக்கூட்டம் இடம் பெறுகின்ற தினத்தில் தொலைபேசி அழைப்பின் மூலம் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாள்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்கின்றனர்.

ஆனால், இன்றைய தினம் (21) இடம் பெற்றுவருகின்ற அமர்விற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட வில்லை.

சபை அமர்விற்கு மூன்று தினங்களுக்கு முன் அனுமதி கோரினால் மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என சபையின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நகர சபை உறுப்பினர்கள் அனைவருடைய கருத்துக்களையும் முழுமையாக வெளியிட்ட காரணத்தினாலும், சபை தலைவருக்கு எதிராக சபையில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் முழுமையாக வெளியில் வந்த காரணத்தினாலும் இன்றைய சபை அமர்விற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் பல கைமாற்றப்பட்டுள்ளதோடு, சம்மந்தமே இல்லாத பலருக்கு கடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நகர சபை தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாக தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற நகர சபை உறுப்பினர்கள் சிலரை முக்கிய கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனவும் தெரிய வருகின்றது.

ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமைக்கு சில உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.