சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – துரைரெத்தினம்

1qws
1qws

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்குவித்தல் என்னும் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கொள்கின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை அரசுக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் முக்­கி­யஸ்தருமான­மான இரா.துரை­ரெத்­தினம் பகீரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளூநர் மேற்கொள்ளுகின்ற சிங்களக் குடியேற்றத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர். இரா. துரைரெட்ணம் எதிர்ப்பு தெரிவித்து இன்று (22) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 40வீதம் தமிழர்கள், 37வீதம் முஸ்லிம்கள், 23வீதம் சிங்களவர்கள் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதம் தமிழர்கள், 23வீதம் முஸ்லிம்கள், அண்ணளவாக (1.10) சிங்களவர்கள் வாழ்ந்து வரும் கால கட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் யுத்த காலத்தில் தெரிவு செய்யப்பட்ட, நியமிக்கப்பட்ட அமைச்சர்களினால் விகிதாசார அடிப்படையில் அபிவிருத்தி வேலைகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப் படவில்லை.

இத்தோடு அரசாங்கத்தின் படைகள் கூட ஒருபக்கச்சார்பாகவே நடந்து கொண்டுள்ளதோடு, நியமனங்களில், உயர்பதவிகளில் கூட தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்படாதளவிற்கு கிழக்குமாகாணத் தமிழர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதே வரலாறாகும்.

இத்தோடு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களான மண்முனைதென்மேற்கு-பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கச்சைக் கொடிசுவாமி மலை- 135 சி. கிராமசேவகர் பிரிவில் கெவிளியாமடு எல்லைப் பகுதியிலும், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈரலக்குளம் 201 ஏ கிராமசேவகர் பிரிவில் பெரியமாதவணை, மாதவணை, மயிலத்தமடு எல்லைப்பகுதிகளிலும், கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை 209 டி கிராமசேவர் பிரிவிலுள்ள சின்னமாதவணை எல்லைப்பகுதியிலும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை எல்லைப் பகுதியிலும் அத்து மீறிய குடியேற்றங்கள் இடம் பெற்று வருகின்றன.

இவைமட்டுமின்றி பௌத்த மதகுரு ஒருவரால் கடந்த வாரம் தளவாய் கடற்கரை பகுதியிலுள்ள மீனவர்களை வெளியேற்றுமாறு கோரி பௌத்தமதகுரு தலைமையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் மத்திய அரசாங்கத்தின் உதவியோடும். பௌத்த மதகுருக்களாலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்களா என்னும் சந்தேகம் தமிழ் மக்களுக்கு மத்தியில் வலுவடைந்து வருகின்றன.

இந்நிலையில் புதிய ஆளுநர் அவர்களும் மாதவணை,மயிலத்தமடு பகுதியில் விவசாயிகளை ஊக்குவித்தல் என்னும் செயலில் மாவட்ட எல்லைக்குட்பட்டபகுதிகளில் இப்படியொரு திட்டமிட்ட குடியேற்றத்தை மேற்கொள்வது சிங்கள இனப்பரம்பலை அதிகரிக்க வைப்பதற்கான முயற்சிகளாகவே கருதவேண்டியுள்ளது. எனவே இது ஆரோக்கியமான விடயமாக இருக்காது.

ஜனாதிபதியின் நேரடி நிருவாகத்தின் கீழுள்ள ஆளுநரே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்வது ஊடாக மூவின மக்களுக்கு மத்தியிலும் இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகின்றன. இது சமூகத்திற்கு மத்தியிலும், ஏனைய திணைக்களுங்களுக்குமிடையிலும் பரவத் தொடங்கி ஒரு இனத்தை இன்னொரு இனம் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற சூழல் உருவாக்கப்படும்.

மூவின மக்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளுநர் அவர்கள் ஒருஇனம் சார்ந்த குடியேற்றத்தை மேற்கொள்வது என்பது ஆளுநரின் தவறான கொள்கைகளை வெளிக்காட்டி நிற்கின்றது. கால்நடைகளுக்குரிய மேச்சல் தரையை இல்லாமல் செய்து அதாவது ஒரு தொழிலை அழித்து இன்னொரு தொழிலை உண்டாக்குவது மாகாணசபையின் கொள்கையல்ல.

எனவே இனங்களுக்குள் இனமுரண்பாடுகள் ஏற்படாவண்ணம் தடுத்து நிறுத்தவும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் இலங்கை அரசுக்கு பகீரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன் என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.