20ஐ தோற்கடிக்க மக்கள் இயக்கமொன்று உருவாக்கபட வேண்டும் – புபுது ஜயகொட அறைகூவல்

pubudu flsp 1200x797 1200x797 1
pubudu flsp 1200x797 1200x797 1

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும்,  சமுதாயத்தின் மத்தியில் அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதனை முன்னிறுத்திய மக்கள் இயக்கமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னணி சோசலிச கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட அறைகூவல் விடுத்துள்ளார்.

20ஆவது திருத்தம் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புவதற்கான உரிமை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு  வழங்கப்பட்டிருக்கிறது. ஏனைய அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியின் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அதேபோன்று 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமானால் எந்தவொரு அரச நிறுவனத்தினதும் பிரதானியாக/ பணிப்பாளராக நியமிக்கக்கூடிய நிலை உருவாகும். 

இப்போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாக இருக்கும் ஒருவர், 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் பொதுநிர்வாக சேவைக்குள் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்படும் நிலை உருவாகும். ஆக, 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் ஊடாக வழங்கப்பட்டதை விடவும், மக்களின் இறையாண்மையையும் நாட்டின் ஜனநாயகத்தையும் புறந்தள்ளக் கூடியவாறான சரத்துக்களே 20 ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள பிரபுத்துவ ஏகாதிபத்தியவாத முறையொன்றை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லும் விதமாகவே அரசாங்கத்தினால் இந்த அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோன்று இந்தத் திருத்தத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களிப்பவர்கள் உண்மையில் மக்களின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்கவில்லை. 

மாறாக அமைச்சுபதவி, ஏனைய வரப்பிரசாதங்கள் உள்ளிட்ட தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே அவர்கள் 20 ஆவது திருத்ததிற்கு ஆதரவளிக்கிறார்கள். எனவே இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும்,  சமுதாயத்தின் மத்தியில் அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதனை முன்னிறுத்திய மக்கள் இயக்கமொன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.