20 நிறைவேறினால் ஹிட்லரை போன்ற கொடிய தலைவர் உருவாகுவதை தடுக்க முடியாது – ஹிருணிக்கா பிரேமச்சந்திர

hirunika
hirunika

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஹிட்லரை போன்ற கொடிய தலைவர் ஒருவர் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எப்போதாவது நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பிருக்கலாம். அந்த எண்ணத்தில் தவறில்லை. ஆனால்  20 ஐ விமர்சித்ததன் காரணமாக பாதள குழு தலைவர் மாக்கந்துரே மதூஷ் போன்று எதிர்காலத்தில் அவரை கொலை செய்வதற்கும் வாய்ப்புள்ளது.

ஐனநாயக ஆட்சி வேண்டாம் என்ற சர்வாதிகார தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக வாக்குகளை பயன்படுத்திய மக்கள் இலங்கையில் உள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஐபக்‌ஷ அரசியல் அனுபவம் கொண்டவராகவும் ஜனாதிபதி கோத்தாயபய ராஜபக்‌ஷ அனுபவம் அற்றவராகவும் உள்ளனர். அத்தகைய ஒருவர் கையில் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ராஜபக்‌ஷர்கள் மாத்திரமே நாட்டின் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. ஏனையோருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். பிரதமர் மஹிந்த இன்றேல் ராஐபக்‌ஷாக்களின் குடும்பத்திற்குள் சிக்கல் தோன்றும். அப்போது ஜனாதிபதியின் வரம்பு மீறிய அதிகாரமே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.