யாழ். மாநகர சபை உறுப்பினர் மயூரனை பதவி நீக்குவதற்கான தீர்மானம் இடைநிறுத்தம்

FB IMG 1603450470455
FB IMG 1603450470455

யாழ்.மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி பிரதிவாதிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மன்றில் முன்னிலையாக உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றம் அன்றுவரை இடைக்காலத் தடைக் கட்டளை வலுவில் இருக்கும் என அறிவித்தது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தெரிவாகிய மகேந்திரம் மயூரன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் மகேந்திரன் மயூரனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மகேந்திரன் மயூரன் நீதிப்பேராணை மனுவை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாகத் தாக்கல் செய்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார். இந்த மனு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

மனுதாரரின் விண்ணப்பம் முகத்தோற்றளவில் மன்றுக்கு திருப்திப்படுத்துவதால் இடைக்காலத் தடையை வழங்கி மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டது. அத்தோடு மனுவை பரிசீலனைக்கு எடுக்க பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் வழங்க உத்தரவிட்டது.