மதுஷின் மரணத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

m 2
m 2

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட மாகந்துரே மதுஷ் என்ற சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சிதவின் மரணம் சம்பந்தமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரணம் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச அமைப்புகளுக்கு தெரியப்படுத்த தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

காவற்துறையினரின் தடுப்பு காவலில் இருந்த மதுஷின் மரணத்திற்கும் காவற்துறையினருக்கும் தொடர்பு இல்லை என்றால், அந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக்குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக குறைந்தது காவற்துறை அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவை எதுவும் நடக்கவில்லை. மதுஷ் போன்றவர்கள் பிறப்பிலேயே குற்றவாளிகள் அல்ல.

சமூக முறைமையில் அவர்கள் குற்றவாளிகளாக மாறுகின்றனர். துப்பாக்கி தோட்டாக்களில் இவற்றுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக உரிய புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டுள்ளார்.