இரட்டை நாக்குடைய மிகப்பெரிய நயவஞ்சகரே அரவிந்குமார் என்கிறார் எம்.பி: சிவலிங்கம்

625.500.560.320.160.600.666.800.900.160.90
625.500.560.320.160.600.666.800.900.160.90

39 minutes ago

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரைப் போல் நயவஞ்சகரை இதுவரை பார்த்தது கிடையாது என்றும், மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பதை அரவிந்குமாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்,

அரவிந்குமார், இரட்டை நாக்குடைய மிகப் பெரிய நயவஞ்சகர். அவர் சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்திருந்தார்.

தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி, சாகும் வரை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ச – மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு வாக்களிக்கக்கூடாது என பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

ஆனால், அவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இன்று சுயநலனுக்காக அடமானம் வைத்திருக்கின்றார்.

அது மாத்திரமல்லாது அவ்வாறு வாக்குகளை அடமானம் வைத்து தனக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் ஆளும் கட்சியுடன் கள்ள உறவை வைத்திருந்த கேவலமான மனிதர் அவர். நேர்மையான ஒரு நபராக இருந்திருந்தால் கட்சியுடன் பேச்சுகள் நடத்தி, உரிய முறையில் மக்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு அரசுக்கு வாக்களித்திருப்பார்.

ஆயினும், அற்ப சலுகைகளுக்காக மக்களின் கொள்கைகளை விட சுயலாபமே அவருக்கு முக்கியம் என்பதை இன்று எங்களால் அறியமுடிகின்றது.

செந்தில் தொண்டமான் அரச தரப்பில் வாக்குக் கேட்கும்போது அவருக்கு வாக்களித்திருந்தால் இன்று பதுளை மாவட்டத்தில் சக்தி வாய்ந்த கெபினட் அமைச்சு மட்டுமன்றி பதுளை மாவட்ட மக்கள் இந்த அரசின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.

ஆனால், இன்று அரவிந்குமாருக்கு வாக்களித்ததால் பின் கதவு வழியாக அரசுக்கு உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை அவ்வாறு உருவாகியிருக்கிறது.

மரியாதையோடு செல்ல இருந்த தமிழ் மக்களை தன்னோடு சுய இலாபத்துக்காக இனவாதத்தைப் பேசி திசை திருப்பி மீண்டும் அவர்களை கோட்டாபய ராஜபக்ச – மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசிடம் அடகு வைத்த பெருமை அரவிந்குமாரையே சாரும்.

இப்படியான நயவஞ்சகரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. மக்கள் உண்மை நிலை என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன் என்றுள்ளது.