துமிந்தவை விடுதலை செய்யக் கோரும் கடிதத்தில் கையொப்பமிட்டது தமிழ் முற்போக்கு கூட்டணி!

Tamil Progressive Alliance TPA 62
Tamil Progressive Alliance TPA 62

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இதன்படி, மனிதாபிமான அடிப்படையிலேயே, தாம் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 160 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த கடிதத்தில் கையொப்பமிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, தாம் கையெழுத்திட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துமிந்த சில்வா சுமார் ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான முறையிலேயே தாம் கையெழுத்திட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கடிதத்தில் தான் கையெழுத்திடவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் கையொப்பம் இடுமாறு தன்னிடம் கோரிய போதிலும், தான் அதற்கு இணங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டமை குறித்து தனக்குத் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அறிந்து கொள்ள, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.