அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு

download 34
download 34

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயம் பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களில்  தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க போக்கை அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சீனா கடுந்தொனியில் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க கொள்கை மட்ட பிரதி உதவிச்செயலர் டீன் தொம்ஸன் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் நேரடியாகவே தலையீடு செய்திருப்பதுடன், இலங்கை அதன் வெளியுறவுக்கொள்கைகள் குறித்து அவசியமானதும் கடினமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். 

இது இராஜதந்திர நடைமுறைகளை முற்றிலும் மீறும் வகையிலான செயற்பாடாகும். மறுநாள் அதற்கான பிரதிபலிப்பை வெளிப்படுத்திய சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், அமெரிக்க உயரதிகாரியின் கருத்து அவர்களின் ‘பனிப்போருக்கான’ மனநிலையையும்  பிற நாடுகளின்  விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையீடு செய்யும் அதன் போக்கையும் சிறிய நாடுகள் எந்த பக்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வற்புறுத்திக்கூறும் தன்மையையும்  வெளிப்படுத்துகின்றது என்று கடுந்தொனியில் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுமார் 2000 வருடகாலமாக நட்புடன் கூடிய வரலாறொன்று காணப்படுகின்றது. எம்மிரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கையாளக்கூடிய தெளிவு எமக்கு இருக்கும் அதேவேளை அதில் மூன்றாம் தரப்பொன்று கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 1950 ஆம் ஆண்டளவில் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் விரிவாக்கப்படுவதற்கு முன்னதாகவே நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தை முன்னெடுத்து வந்தோம்.

இலங்கையின் உண்மையான நட்புறவு நாடு என்ற அடிப்படையில் அது ஏனைய நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணிவருவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அதுகுறித்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தைப் பயன்படுத்திக்கொள்வதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு அமெரிக்கா ‘அவசியமானதும் கடினமானதுமான தீர்மானங்களை’ எடுப்பதுடன், ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களின் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு உண்மையான நண்பனொருவன் தன்னை மற்றையவரின் நிலையிலிருத்திப் பார்ப்பது அவசியமாகும் என்ற ஆலோசனையை அமெரிக்காவிற்கு வழங்க விரும்புகிறோம்.  கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து இலங்கை மிகப்பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் ‘இறக்குமதி செய்யப்பட்ட’ வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான சக்தி அதனிடம் இல்லை. அமெரிக்காவில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் அதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 230 ஆயிரமாக இருக்கும் நிலையில், அந்நாடு இலங்கைக்கு விரிவானதொரு பிரதிநிதிகள் குழுவை அனுப்புகின்றது. 

இது உண்மையிலேயே அந்நாட்டின் மீதான உங்களின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகின்றதா? இது உண்மையில் இலங்கை மக்கள் மீதான அக்கறையின் விளைவா? என்ற கேள்விகளை மக்கள் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. எனினும் அது கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதார மீளெழுச்சி ஆகியவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்திச் சென்றிருந்தது.

அத்தோடு இலங்கைக்கு தேவையற்ற தொந்தரவை வழங்கக்கூடாது என்பதற்காக அந்நாட்டுக்குள்ளான விஜயங்களைப் பெருமளவிற்கு மட்டுப்படுத்தியிருந்ததோடு, தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியது. எனவே இதுகுறித்தும் சிறிய நாடுகளுடனான தொடர்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.