மன்னாரிலும் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போக்கு வரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்றும் வகையிலும் மன்னார் காவல்துறையினர் இன்று (28) காலை 8 மணியளவில் மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக முகக் கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்பதை வழியுறுத்தி பேருந்துகளில் விழிர்ப்புணர்வு ஸ்ரிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

மன்னார் சிரேஸ்டகாவல்துறை அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க தலைமையில் மன்னார் மாவட்ட போக்குவரத்து பிரிவு காவல்துறையினரும் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, மன்னார் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சந்தன பிரசாத் ஜெயதிலக்க, மன்னார் காவல்துறை போக்கு வரத்துப் பிரிவு அதிகாரி இ.ஜி.எம்.ஐ.ஏக்கநாயக்க மற்றும் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதி நிதிகளும் கலந்து விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதே வேளை மன்னார் நகர சபையினால் போக்குவரத்தில் ஈடுபடும் அரச தனியார் பேருந்துகளுக்கு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.