யாழ்ப்பாணத்தில் மாடு வளர்க்க விரும்புபவர்களிற்கு மாடும், பணமும் வழங்க தீர்மானம்!

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடமாடி திரியும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பிரச்சனை தொடர்பில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (28) காலை வேலணை பிரதேச செயலகத்தில்கட்டாக்காலி மாடுகள் தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரில் வேலணை பிரதேச செயலகர் அம்பலவாணர் சோதிவாணன், வேலணை பிரதேசசபை தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி, அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தொடரில் தீவக பிரதேச செயலக எல்லைக்குள் நீண்டகால இடப்பெயர்வின் காரணமாக கைவிடப்பட்ட நிலையிலிருந்த கால்நடைகள் கடந்த 20 வருடங்களாக பெருகி ஆயிரக்கணக்கில் பிரதேசத்தில் உரிமை கோரப்படாத கட்டாக்காலி கால்நடைகளாக சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமை தொடர்பாகவும் தீவக பிரதேச விவசாய நிலங்களை முழுமையாக பயன்படுத்தி தேசிய கொள்கைக்கு வலுச்சேர்ப்பதற்கு முயற்சிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்களின் சேதம் தொடர்பாகவும், வீதிகளில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கால்நடை வளர்ப்போர் தம் தரப்பின் நியாயங்களை முன் வைத்தனர்.

இது தொடர்பில் ஆராயப்பட்டு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர்கள், அப்பகுதி கிராம சேவகர்கள் ஊடாக விண்ணபிக்கும் போது ஒரு குடும்பத்திற்கு 5 மாடுகள் வீதமும் 3000 ரூபாய் பராமரிப்பு செலவும் வழங்கப்படும்.

பண்ணையாக உருவாக்கப்படும் போது 50 மாடுகள் வீதம் வழங்கப்படும் எனவும் வழங்கப்படும் மாடுகளை விற்கமுடியாது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.