யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை ஆரம்பம்!

202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF
202004241656205226 Tamil News Coronavirus PCR test intensity 1000 people checkup daily in SECVPF

 

வடக்கில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை  அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம்  பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில்  தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ். பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில்  யாழ்,பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வு நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வுகூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.