மட்டுமீறிய அதிகாரங்களுக்கு இரையாகாதவாறு ஜனாதிபதி கவனமாக செயலாற்ற வேண்டும்-கரு ஜயசூரிய

fda91975 e3a33da4 karu jayasuriya 850x460 acf cropped
fda91975 e3a33da4 karu jayasuriya 850x460 acf cropped

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக தற்போது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய அதிகாரங்கள், அதற்கு உரித்துடையவரை அடிமைப்படுத்தக் கூடியவையாகும்.

எனவே ஜனாதிபதி அதற்கு இரையாகாதவாறு அவதானத்துடன் செயலாற்ற வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திற்கு அனுமதியளித்து சபாநாயகர் கையெழுத்திட்டவுடன் உலகிலேயே தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உயர் அதிகாரங்களைக்கொண்ட ஜனாதிபதியொருவரை இலங்கை கொண்டிருக்கும்.

இவ்வாறான மட்டற்ற உயர் அதிகாரங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தப்படாது என்று நம்புவதாக ஏற்கனவே தனது டுவிட்டர் பதிவொன்றில் கரு ஜயசூரிய குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு டுவிட்டர் பதிவின் ஊடாக அவர் மேற்கண்டவாறு எச்சரித்திருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தற்போது ஜனாதிபதி அவர் எப்போதும் விரும்பியது போன்று மட்டுமீறிய அதிகாரங்களை அனுபவிக்கின்றார். இந்நிலையில் அவர் ஏற்கனவே வாக்குறுதியளித்தது போன்று மக்கள் மத்தியில் சுபீட்சத்தையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவார் என்று நாம் நம்புகின்றோம்.

எனினும் இவ்வாறான மட்டுமீறிய அதிகாரங்கள், அதற்கு உரித்துடையவரை அடிமைப்படுத்தக் கூடியதாகும். எனவே அதற்கு இரையாகாதவாறு ஜனாதிபதி கவனமாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியிருக்கின்றார்.