ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்காமைக்கா காரணத்தை தெரிவிக்கும் சி.வி

cv wickneswaran
cv wickneswaran

தமிழ் மக்கள் அல்லல் படுவதனை தவிர்ப்பதற்கும், அவர்களிற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை தவிர்ப்பதற்காகவுமே தான் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவில்லை என வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம், நீதியரசர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் க.வி.விக்னேஸ்வரன் பயந்து கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்றவில்லை என்று ஒரு தமிழ் அரசியல்வாதி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து க.வி விக்னேஸ்வரன் பதிலளிக்கையில்

அவர் என்ன கூறினார், எங்கு கூறினார், ஏன் கூறினார் என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் அப்படிக் கூறினாரா என்பது பற்றியும் தெரியாது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கும்படி சில மாதங்களுக்கு முன் பல அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். நான் மறுத்துவிட்டேன்.

அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

என்னை அரசியலுக்குள் கொண்டுவர திரு.சம்பந்தன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஸ்ரீதரன் அவர்களும் எனது மாணவர் திரு.சுமந்திரன் அவர்களும் கேட்டபோது நான் மறுத்தேன். அவர்களின் தொடர் ஆக்கினையால் நான் ஒன்றைக் கூறினேன். அப்போதைய ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து அழைத்தால் நான் அவர்களின் கோரிக்கையைச் சார்பாகக் கருத முடியும் என்றேன்.

சட்டக்கல்லூரி சமகால மாணவரான என் நண்பர் ஆனந்த சங்கரி, கௌரவ மனோகணேசன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கனகஈஸ்வரன் உட்பட பலர் என்னை அழைத்ததால் நான் இணங்கி அரசியலுக்கு வந்தேன். என்னை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிற்குமாறு பல நண்பர்கள் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன் அழைத்தார்கள். அப்போது அக்கோரிக்கையானது கட்சிகள் சேர்ந்து விடுத்ததொன்றல்ல. அன்பர்கள் சிலரின் அழைப்பே அது.

ஐந்து கட்சிகள் அண்மையில் சேர்ந்து கலந்துரையாடும் போது அவர்கள் பொது வேட்பாளர் ஒருவரையே தேடினார்கள். முக்கியமாக அவர் கட்சி சார்ந்த ஒருவராக இருக்கக்கூடாது என்று தீர்மானித்திருந்தார்கள். நான் அரசியலுக்கு வராமல் வெறும் ஓய்வுபெற்ற நீதியரசராக இருந்திருந்தால், கட்சி சார்பற்ற ஒருவரை கட்சிகள் தேடும் போது, அவர்கள் கேட்டிருந்தால் நான் எனது சம்மதத்தைத் தெரியப்படுத்தியிருக்கக் கூடும்.

ஆனால் சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் 24ந் திகதி தொடக்கம் நான் ஒரு அரசியல் கட்சியின் செயலாளர் நாயகம். பொது வேட்பாளர் என்பவர் கட்சி சாராது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்று சகல கட்சிகளும் கருதியிருந்தார்கள். ஆனால் ஒரு கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த காரணத்தினால் பொது வேட்பாளர் பதவிக்கு நான் அருகதையற்றவராக இருந்தேன். எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளராகக் கலந்துகொள்ள என் கட்சி உறுப்பினர் பதவி எனக்கு இடம் அளிக்கவில்லை.

அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் போட்டியிட்டால் அவர் ஏதோவொரு காரணத்திற்காகத்தான் போட்டியிடுவார். அக்காரணம் போட்டியை வெல்ல அல்ல.

இலங்கையின் ஒவ்வொரு தமிழ் மகனும், மகளும் வாக்களித்தால் கூட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் தோற்பார். ஆனால் அவர் போட்டியிட முன்வந்ததற்கான காரணம் என்னவென்று பலரும் ஆராய்வார்கள்.

சிங்களப் போட்டியாளர்களுள் கூடிய சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவுபெற்ற ஒருவரே சிங்கள மக்களிடையே போட்டியில் வெற்றியீட்டுவார்.

தமிழ்ப்பேசும் மக்களின் வாக்குகளைத் தமிழ்ப்போட்டியாளருக்குக் கொடுத்து அவரை ஒரு புறம் ஒதுக்கிவிட்டால் சுலபமாகச் சிங்கள மக்களின் ஆதரவு பெற்றவர் தீவு பூராகவுமான போட்டியில் வென்று விடுவார்.

ஆகவே ஒரு தமிழ்ப் போட்டியாளரை உள்ளடக்கியதன் காரணம் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளரை வெல்ல வைப்பதற்கே என்றுதான் கூறப்படும். அதற்காக அவரிடம் இருந்து பெருவாரியான பணம் பெற்று நான் போட்டியில் கலந்து கொண்டேன் என்றுதான் எமது மக்களே வாய் கூசாமல் கூறுவார்கள்.

ஏன்? என்னை விமர்சித்த குறித்த அரசியல்வாதி கூட நான் நானாகவே வந்திருந்தால் அவ்வாறு தான் கூறக்கூடும். தமிழ் மக்கள் சிலருடன் சேர்ந்து கபட நாடகம் நடத்தி தமது குறிக்கோள்களை எட்டுவது சிங்கள அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. ஆகவே தமிழ் வேட்பாளராக முன் வந்து அந்த அவப்பெயரை நான் பெற வேண்டுமா?

என்னைப் பொது வேட்பாளராக வரும்படி சிலர் அழைத்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் எமது அதிகப்படியான தமிழ்க் கட்சிகளிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கவில்லை. எனவே பொது வேட்பாளர் என்ற குறியீடு என் சார்பில் பாவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அப்போது இருக்கவில்லை.

நான் ஒரு கட்சிக்கு செயலாளர் நாயகம் என்ற வகையில் என் கட்சியின் வேட்பாளர் என்றே பரிணாமம் பெற்றிருக்க முடியும். கட்சிகளை ஒன்று சேர்த்து தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்கள் சார்பில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணும் ஒருவருக்கு கட்சி ரீதியாகத் தமது தமிழ் உறவுகளைத் தானே பிரிப்பது என்பது சரியென்றுபடவில்லை.

தமிழ் மக்களை ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற முறையில் தனிமைப்படுத்தி வாக்குக்கேட்பது எந்தளவுக்கு சரி என்ற கேள்வியும் எழுந்தது. தமிழர் சார்பில் ஒருவரை முன்னிறுத்துவதுதான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை உலகறியச் செய்யலாம் என்று எனது நண்பர்கள் கூறிக்கொண்டார்கள்.

ஆனால் அவ்வாறு தமிழர்களைத் தனித்துவப்படுத்தி எமது கோரிக்கைகளை முன் வைப்பதால் சமூகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் நாங்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலையில் இருந்தோம்.

எமது தனித்துவமான நடவடிக்கைகளை சிங்கள மக்கள் தீவிரவாதம் என்றே கணிக்கின்றனர். கொள்கை வெறியர் என்றே எம்மைப் பார்க்கின்றனர். ‘இந்த நாடு சிங்களவருடையது. தமிழர்கள் நேற்று வந்த கள்ளத் தோணிகள். அவர்கள் நேற்று வந்திருந்து இன்று தமக்கென தனித்துவத்தைக் கேட்பது எந்த விதத்தில் சரியாகும்?’ என்றே பல சிங்கள மக்கள் சிந்திக்கின்றார்கள். அவர்களைக் குறைகூற முடியாது. அவ்வாறு தான் சிங்கள அரசியல்வாதிகள் அவர்களை நம்ப வைத்து வந்துள்ளார்கள்.

அவ்வாறு தான் இலங்கைச் சரித்திரம் இன்று போதிக்கப்படுகின்றது. நாம் எமது தனித்துவத்தை உலகறியச் செய்யப் போய் சிங்கள மக்களின் மனதில் வெறுப்பையும் பயத்தையும் எழுப்பக்கூடிய ஒரு நிலை வரக்கூடும் என்று எம்முட் சிலர் சிந்தித்தார்கள்.

தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தமிழர்க்கே வாக்களிப்பதால் சிங்கள மக்கள் தரப்பில் பாதிப்புறப்போகும் தரப்பால் மீண்டும் ஒரு கலகம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளையும் நாம் பரிசீலித்துப் பார்த்தோம்.

தமிழரின் தனித்துவத்தைப் பாராளுமன்றத்தில், வெளிநாட்டில், சர்வதேச அரங்குகளில் கூற வேண்டுமே ஒளிய அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் அல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தோம்.

எமது நடவடிக்கைகள் எங்கெங்கோ இருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு அல்லல்களையும் அழிவுகளையும் கொண்டு வருவதை நாம் விரும்பவில்லை.

நாங்கள் மக்கட் தலைவர்கள் என்ற முறையில் எம்மை அரசியலில் வருத்தலாம். ஆனால் எங்களால் மக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டவன் நான்.

அவ்வாறான சிந்தனை ஒரு பயந்த மனிதனின் சிந்தனை என்று யாராவது கூறினால் அதனை நான் மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆகவே மேற்படி காரணங்கள் யாவும் சேர்ந்தே நான் தமிழ் வேட்பாளராக முன்னிற்க விரும்பாததற்குக் காரணம். என்றாலும் நான் யாருக்கோ பயந்து ஜனாதிபதி வேட்பாளராக முன்வரவில்லை என்றால் யாருக்குப் பயந்து, எதற்குப் பயந்து என்ற கேள்விகளுக்கும் குறித்த விமர்சகர் பதில் தரவேண்டும். தந்தால் அவற்றிற்கும் பதில் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.