சட்டத்தரணி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை

guruparan
guruparan

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்துவரும் வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவருமான கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இலங்கை இராணுவத்தால் முறையிடப்பட்டிருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்று அதுதொடர்பில் அவருக்கு அறிவிப்பது என்று இன்று பேரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், பொதுநலம் சார்ந்த வழக்குகளில் 2011ஆம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் முன்னிலையாகி வருகின்றார். பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாவது தொடர்பிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவத்தால் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.