அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ள 6 பேர்!

201805090336282259 From Vellore jail to Parol Life imprisonment Absconding SECVPF
201805090336282259 From Vellore jail to Parol Life imprisonment Absconding SECVPF

“யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் என்.சி.ஜீ என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாண பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து உணவக உரிமையாளர் முச்சக்கர வண்டியில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் முச்சக்கர வண்டியில் வேலணை, புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட என்.சி.ஜீ என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்து சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் அலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் இன்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், சாரதியும் நடத்துனரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அந்த பேருந்தில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.