விடுதலைப்புலிகள் மக்களின் உரிமைக்காக போராடியவர்கள்

sampanthar 1
sampanthar 1

விடுதலைப்புலிகள் தமது உரிமைக்காக அன்றி மக்களின் உரிமைக்காக போராடியவர்கள். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (Nov.10) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே நாங்கள் இன்று கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப் புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலை நாங்கள் பகிஷ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராயந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றன. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு, அதிகார பகிர்வு, மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோத்தாபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு.

அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்தராஜபக்ஷ காலத்தில் 2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினைக் கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஷ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.