ஈழத்தின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை கேட்டு மகிழ்ச்சி

Sumanthiran 1
Sumanthiran 1

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ தான் ஈழத்தின் மக்களால் தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்தது தன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (Nov.10) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

ஜனாதிபதி தேர்தல் எங்கள் முன் வருகிற போது இதற்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது தெற்கில் நடக்கும் ஒரு அரசியல் போட்டி. இதில் எங்களை ஈடுபடுத்த தேவையில்லை என்ற பரப்புரை தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படுகிறது. ஆயினும் சென்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கூடுதலான வாக்குகள் கிடைத்தமையால் தான் மஹிந்த ராஜபக்‌ஷவை தோற்கடிக்க முடிந்தது.

அப்பொழுது மஹிந்த ராஜபக்‌ஷ ஈழம் வாக்குகளால் நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன் என்று குறிப்பிட்டதனைக் கேட்க மனதுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

நான் இவர்களை தோற்கடித்து விட்டேன். இனி தமிழ் தேசியம் என்ற ஒன்று கிடையாது. தமிழ் மக்களுடைய உரித்துக்கள் என்று எதுவும் கிடையாது. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன். அரசியல் உரித்துக்கள் என்று பிறிதாக எதுவும் இந்த நாட்டில் இல்லை. அதை போரிலே நான் முறியடித்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு இருந்தவர் தேர்தலில் தோற்று இது ஈழத்தில் வாக்குகளால் அடைந்த தோல்வி என்பதை ஒப்புக் கொண்டார்.

நாங்கள் தெளிவான ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கின்ற அரசியல் கட்சி. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெட்டத்தெளிவாக தெரியும். எங்களுடைய மக்களுக்கும் தெரியும்.

தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக எவரும் வெற்றி பெறாமல் இருக்கப் போவதில்லை. அதிலும் இரண்டு பேரில் ஒருவர் தான் வெல்லப் போகிறார். மிகுதி 32 பேருக்கும் தாங்கள் வெல்வதற்காக போட்டியிடவில்லை என்பது தெரியும். நாங்கள் வாக்களிக்காமல் விட்டால் யார் வெல்லுவார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

தெரிவு ஒன்று தான் உள்ளது. வேறு தெரிவு இல்லை. எங்களுடைய விருப்பங்கள் எல்லாம் ஏராளம் இருக்கிறது. அது வேற விடயம். எங்களுடைய விருப்பிற்காக வாக்களிப்பதற்கு அங்கு தெரிவு இல்லை. வாக்களிக்காமல் விட்டால் கோத்தாபய வெல்லுவதை எவரும் தடுக்க முடியாது.

சஜித் பிரேமதாச தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல விடயங்களை சொல்லியிருக்கிறார். சொல்லுவது எல்லாவற்றையும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இல்லை. ஆனால் குறைந்தது அதை சொல்வதற்காக துணிவாவது இருந்திருக்கிறது.

இது ஒரு பல்லினத்துவ நாடு. பல சமயங்கள் இருக்கின்றன. பல மொழி பேசுகின்ற மக்கள் வாழுகின்ற நாடு. அந்த பல்லினத் தன்மையை நான் பாதுகாப்பேன். மற்றவர் எதுவுமே சொல்லவில்லை. அதி உச்ச அதிகார பகிர்வை நான் செய்வேன் என சொல்லியிருக்கிறார். புதிய அரசியலமைப்பு முயற்சியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே நாம் சஜித் பிரேதமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.