ஊரடங்கு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள விசேட நடைமுறை!

தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அந்தந்த பிரதேச செயலக அலுவலங்களினூடாக விநியோகஸ்தர்கள் ஊரடங்கு அனுமதி பத்திரத்தை பெற முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஒரே நாளில் கடைகளை திறப்பதனால் சுகாதார பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டே அத்தியவசிய பொருட்களை நடமாடும் வர்த்தகர்கள் ஊடாக விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ச.தோ.ச. மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் உள்ளிட்ட ஏனைய சூப்பர் மார்க்கட்டுகள் ஒவ்வொன்றிலும் தலா 15 விநியோக வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவை விற்கும் விற்பனை நிலையங்கள் பத்து விநியோக வாகனங்களை நிறுத்தலாம் என்றும் இணையவழி முறை மூலமாக மருந்தகங்களிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் 15 ஊரடங்கு அனுமதி வழங்கப்படும். அதே நிறுவனத்தில் ஒரு பிராந்தியத்தில் ஐந்து விற்பனை நிலையங்கள் இருந்தால், 75 ஊரடங்கு உத்தரவு அனுமதி வழங்கப்படும்.

இதேபோன்ற அமைப்பு பல விற்பனை நிலையங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனும், விநியோக சேவைகளில் ஈடுபடும்போது தங்கள் ஊழியர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து நிறுவனங்களையும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விநியோகப் பொருட்களை பெற்றுக் கொள்ளும்போது தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.