தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்குவோம்

Kilinochchi Meeting
Kilinochchi Meeting

வடக்கில் மீண்டும் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழலை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தில் 4 ஆயிரம்
மில்லியன்களை பெற்றுள்ளனர். ஆனால் என்ன செய்தனர் கிளிநொச்சியில் எங்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை விட சொல்லுமளவுக்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. சஜித் பிரேமதாசவும் ஏமாற்றுகிறார். இதற்குள் இணைந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட்டு களவானிகளாக உள்ளனர்.

நாம் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் எங்களுடைய காலத்தில் போன்று அபிவிருத்திகளை கொண்டு வருவோம். முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு, மாற்று வலுவுள்ளோர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மேம்பாடு என்பவற்றுடன் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பலப்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பும் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமான உரம், உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பு போன்ற மக்களின் அவசிய தேவைகள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.