வவுனியாவில் மீன் விற்பனையில் வீழ்ச்சி!

கொரோனா அச்சம் காரணமாக வவுனியாவில் மீன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் பேலியகொட மீன் சந்தையில் கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களாக 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு தற்போது மிக அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் வடமாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்துள்ள நிலையில் மீன் தொடர்பில் மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திற்கு யாழ்ப்பாணம் , மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற மீன் வகைகளின் விற்பனை வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மக்கள் மீன்களை பெரியளவில் கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், பலரும் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

மீன்கள் விற்பனையின்றி நகர மீன் சந்தை , குருமன்காடு மீன் சந்தை , குழுமாட்டுச்சந்தி மீன்சந்தை போன்ற இடங்களில் மீன்கள் தேங்கி காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டமின்றி மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் வியாபாரிகளும் நட்டமடைந்துள்ளனர்.