கழிவு நீரால் அச்சமைடையும் வவுனியா மக்கள் அதிகாரிகள் கவனமெடுப்பார்களா எனவும் கேள்வி?

IMG20201104105508
IMG20201104105508

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற்கல்லூரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எமது கிராமமூடாக சென்றே வவுனியா குளத்தில் கலக்கின்றது. குறித்த கழிவுநீர் வெளியேறுவதற்கு சீரானமுறையில் வடிகான்கள் அமைக்கப்படாமையினால் வீதியின் கரையில் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்து காணப்படுகின்றது.

அத்துடன் தேசிய கல்வியற்கல்லூரியானது கொவிட்-19 தனிமைப்படுத்தல் மையமாக தற்போது செயற்பட்டு வருகின்றது. அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டும் வருகின்றது. இந்நிலையில் அங்கிருந்து வெளியேறும் கழிவு நீரால் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கல்வியற்கல்லூரியானது 50ஏக்கர் அளவான பரப்பினை கொண்டிருக்கும் நிலையில் வெளியேறும் கழிவுநீரை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மீள்சூழற்சி செய்வதற்கான வாய்ப்புக்கள் நிறைய காணப்படுகின்றது.

எனினும் அவ்வாறு எதனையும் மேற்கொள்ளாமல் கிராமத்தினூடாக விடப்பட்டு நேரடியாக வவுனியா குளத்தினுள் சென்று கலக்கின்றது. இதனால் குளத்து நீரும் மாசுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராமத்தின் பொது அமைப்புகளால் கல்லூரியின் முதல்வருக்கு பலமுறை தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சுகாதார பரிசோதகர்களிற்கு தெரியப்படுத்தியும் எந்தவித பலனும் எமக்கு கிடைக்கவில்லை.

IMG20201104102146
IMG20201104102146

எனவே பல வருடங்களாக நீடித்து வருகின்ற குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகள் கவனம் எடுப்பதுடன், சீரான வடிகான் முறையை ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் கழிவு நீரை வெளியேற்றும் ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அல்லது கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அதனை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

IMG20201104102130 1
IMG20201104102130 1