சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியை எதிர்நோக்கி வருகின்றது – முஜிபுர் ரஹ்மான்

சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியையே எதிர்நோக்கி வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், சுயதொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வரும்போது வீதியோரங்களில் காணப்படும் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக ஊடகங்களின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு காரணமாகவே அவை மூடப்பட்டுள்ளன என்பதை அவர் மறந்துவிட்டார்போல, கொழும்புக்குள் நாளாந்தம் ஊதியம் பெற்று வாழ்பவர்களே அதிகளவில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் காரணமாக இவர்களது அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜனாதிபதி இவர்கள் தொடர்பில் ஊடகங்களின் முன்னிலையில் கருத்துரைப்பதை விடுத்து, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

அரிசியின் நிர்ணய விலை தொடர்பில் இன்னுமொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரையில் அரிசிக்கான நிர்ணய விலை தொடர்பில் மாத்திரம் மூன்று வர்த்தமானிகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் நிர்ணய விலையை அறிவிக்க முடியவில்லை. இவ்வாறான நிலைமையில் எவ்வாறு கொரோனா வைரஸ் பரவலை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள்.

மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், மக்கள் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டார்கள். சுபீட்சமான ஆட்சி இன்று தோல்வியையே எதிர்நோக்கி வருகின்ற” என அவர் குறிப்பிட்டுள்ளார்.