கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட பருப்பு உட்பட காலாவதியான உணவு பொருட்கள்!

K P 206 Eye 01329
K P 206 Eye 01329

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள, பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டிடமொன்று இன்று (06.11.2020) ´சீல்´ வைக்கப்பட்டது.

மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளும், தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் செயலாளரும் இன்று மேற்படி கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர்.

எனினும், குறித்த கட்டிடம் கூட்டுறவால் மூடப்பட்டு சாவியும் எடுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலேயே ´சீல்´ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் செயலாளர் பண்டார,

” காலாவதியான பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பரிசோதிக்க வந்தோம். எனினும் கட்டடம் மூடப்பட்டிருந்ததால் அதனை சீல் வைத்தோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு இங்கிருந்தே பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உரிய விசாரணைகள் இடம்பெறும்.” – என்றார்.