கொரோனா தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது – சஜித்

நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

சமூகத்தில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் சமூக ரீதியாகப்பரவவில்லை என அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா தொற்று காரணமாகத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் முழுமையாக அநாதையாக்கப்பட்டுள்ளார்கள். தொழிலை இழந்த நிலையில் அவர்கள் உட்கொள்ள உணவு , தங்கி இருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை, முதலாளிமார்கள் குறித்த விடுதியிலிருந்து யுவதி, இளைஞர்களை அகற்ற முயற்சிக்கிறார்கள்.

எனவே, அரசாங்கம் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.