கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்த நடவடிக்கை – விமானப்படை தளபதி

e0c3cbf2 b6396cb4 sutharsana pathirana 850x460 acf cropped
e0c3cbf2 b6396cb4 sutharsana pathirana 850x460 acf cropped

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தும் வரைபடத்தின் தயாரிப்பு இறுதிப்பணிகளை அடைந்திருப்பதாக இலங்கை விமானப்படையின் புதிய தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 18ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்சல் சுதர்சன பத்திரண கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

தலதா மாளிகையின் விஜயத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ”கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பமாகிய காலகட்டத்தில் அங்கிருந்த இலங்கை பிரஜைகளை முதலில் விசேட விமானம் ஊடாக மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வரவழைத்தோம். அதன் பின்னர் விமான நிலையத்தில் அவர்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்தப் பணியை விமானப்படையினரே சிறப்பாக செய்திருந்தார்கள்.

இலங்கையில் கொரோனா ஒழிப்பு பணிகளை ஆரம்பித்ததும் விமானப்படைதான். இதற்காக சிறப்பு பயிற்றப்பட்ட சிப்பாய்கள் விமானப்படையில் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்;. அதேபோல விமானப்படைக்கு எதிர்வரும் காலங்களில் மேலும் சில விமானங்களைக் கொள்வனவு செய்யவும் எதிர்பார்க்கின்றோம்.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் நாடளாவிய ரீதியில் தொற்று பரவிய இடங்களை அடையாளப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விமானப்படையினரின் உதவிமூலம் ஆகாய மார்க்கமாக அடையாளப்படுத்தப்பட்டு இந்த வரைபடம் தயாரிக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்