மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புற்றால் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும் ஒருசில அதிகாரிகளுமே பொறுப்பு!

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புறுமாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்புகளையும் சட்டதிட்டங்களை மீறி தங்கள் அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும், அவர்களின் சொல்கேட்டு செயற்படும் ஒருசில அதிகாரிகளுமே ஏற்கவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளருமாகிய பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கொரோனா நிலைமை தொடர்பில் நாட்டில் சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மீறல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசினால் விதிக்கப்படுகின்ற கொரோனா சட்டதிட்டங்களை முதலில் அரச தரப்பு அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அதனை மக்கள் சரிவர கடைப்பிடிக்கின்றார்களா என்பதைப்பார்க்க முடியும்.

நீங்கள் போடும் சட்டங்களை நீங்களே மீறினால் மக்கள் என்ன செய்வார்கள்? வெறுமனே எதிர்த்தரப்பினரை அடக்குவதற்கும், மக்களை ஒரு பீதிக்குள் உள்ளாக்குவதற்குமே இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்வியலில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளைச் சரிவர செய்ய முடியாமல் கொரோனா சட்டங்கள் பாய்கின்றன.

ஆனால், ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மக்களை ஒன்று திரட்டி கூட்டங்கள் நடத்துவதற்கும், அபிவிருத்தி என்ற மாயையினைக் கட்டவிழ்ப்பதற்கும் எந்தவித சட்டங்களும் பாய்வதில்லை. இதன் பெயர்தான் ஒரே நாடு ஒரே சட்டமா என்று கேட்கத் தோணுகின்றது. அமைச்சர்கள் பல நிகழ்வுகளை ஒழுங்கமைத்து செயற்படுகின்றார்கள்.

இதுவே சாதாரண மக்களின் நிகழ்வுகள் இவ்வாறு இடம்பெற்றிருந்தால் உடனே கொரோனா சட்டம், தனிமைப்படுத்தல் சட்டம் என எல்லாம் சொல்லுவார்கள்.

அன்றாடம் பிழைப்பு நடத்தும் சலூன் கடைகளைத் திறப்பதற்குக் கூட வரிந்துகட்டிக் கொண்டு வரும் கொரோனா சட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மக்களைத் திரட்டி அடிக்கல் நாட்டு விழாக்கள், திறப்பு விழாக்கள் என்பன மேற்கொள்வதற்கு மாத்திரம் வளைந்து கொடுக்கின்றதா எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களின் அன்றாட வாழ்வை முடக்கி ஆளுந்தரப்பினர் அரசியல் இலாபம் தேடும் இத்தகு செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அதிமேதகு ஜனாதிபதி இச்செயற்பாடுகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் வேதனைக்குரியது. தற்போதைய இந்த வைரஸின் பரவல் வேக அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு ஆளுந்தரப்பினர் தங்கள் அபிவிருத்தி விளையாட்டுகளை நிலைமைக்கேற்றால் போல் செயற்படுத்த வேண்டும்.

அதற்கு மக்களை ஒன்று திரட்டத்தேவையில்லை. அவ்வாறு ஒன்று திரட்டி அங்குள்ள மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் மேற்கொள்வது. முழுப் பொறுப்பையும் அந்நிகழ்வு ஏற்பாட்டாளர்களே ஏற்கவேண்டும்.

அவர்கள் மீது உரிய சட்டங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும். இவ்வாறாக தற்போதைய நிலைமை மேலும் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புறுமாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்புகளையும் கொரோனா சட்டதிட்டங்களை மீறி தங்கள் அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும், அவர்களின் சொல்கேட்டு செயற்படும் ஒருசில அதிகாரிகளுமே ஏற்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.