மாணவர்களின் கற்றல் நடவடிக்கை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுஜித்

unnamed 16
unnamed 16

சாதாரண தர மாணவர்களை பரீட்சைக்கு தயாராக்குவதற்காக அரச தொலைக்காட்சி ஊடகங்களை பயன்படுத்தி அவர்களுக்கான பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைரஸ் பரவல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் எதிர்வரும் ஜனவரி மாதம் சாதாரணதர பரீட்சையை நடத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு தற்போது இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் இணையத்தில் கல்விக் கற்றுக் கொள்ளும் அளவுக்கு வசதிகள் இல்லை. எமது ஆட்சி காலத்தில் நாங்கள் டெப் கருவிகளை கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது இப்போது ஆளும் தரப்பில் இருப்பவர்கள் பெரிதும் விமர்சித்தார்கள். எனினும் தற்போது பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நிலைமையை கருத்திற் கொண்டு அரச தொலைக்காட்சி  ஊடகங்களில் அவர்களுக்கான பாடங்களை கற்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்ட போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தேசிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அனைவரையும் விவசாயம் செய்யுமாறும் கூறியிருந்தார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தற்போது  அந்த உற்பத்திகளை அவர்கள் விற்பனை செய்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். இன்று எமது நாட்டு விவசாயிகளின் நிலைமை தொடர்பில் மெனிங் சந்தையில் விற்பனைக் செய்வதற்காக தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்த விவசாயிகளுக்கு எதிர் நோக்க வேண்டி ஏற்பட்ட நிலைமைகள் ஊடாக அவதானிக்க கூடியதாக இருந்தது.

விவசாயிகளைப் போன்று மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் ,எமது நாட்டு மக்கள் நாட்டுக்கு வரமுடியாமல் பெரிதும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நாங்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அவர்கள் இன்னமும் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்காக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக தாமே முன்வந்து உதவி வழங்குவதாக கூறிக் கொண்டு வருபவர்களும் மோசடிகளே செய்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் விளையாட்டு பேச்சுகள் இல்லை என்றனர். ஆனால் அரிசிக்கு கூட தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆளும் தரப்பு அமைச்சர்களின் செயற்பாடுகள் ஊடகங்களில் மாத்திரமே இருக்கின்றது. நேரடியாக ஒரு செயற்பாட்டையும் காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.