ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் கொரோனா அபாய நிலையிலுள்ளது-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

18c2ca26 f521aeec gmoa 850x460 acf cropped
18c2ca26 f521aeec gmoa 850x460 acf cropped

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை விரைவில் இனங்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு காவல்துறை கொத்தணி துரிதமாக முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களை இனங்காண்பதிலும் தொற்று பரவல் கட்டுப்படுத்துவதிலும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஒக்டோபர் மாதத்தில் பத்தாயிரத்திற்குச் சற்று குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர். எனினும் இரு வாரங்களில் 6000 தொற்றாளர்கள் வரை இனங்காணப்படக் கூடிய நிலைமை நவம்பர் மாதத்தில் ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதம் அபாய நிலையிலுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அத்துடன், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மரணங்கள் எவையும் இனங்காணப்படவில்லை என்றாலும் , ஞாயிறன்று 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெருமளவானவை கொழும்பில் பதிவாகிய மரணங்களாகும்.

அதற்கமைய அபாயம் எங்கு காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகள் தற்போதும் எச்சரிக்கைமிக்கவையாகவே உள்ளன. இவற்றை நாம் சரியாக இனங்காணவேண்டும்.

அதன் காரணமாகவே மேல் மாகாணத்தில் பல காவல்துறை பிரிவுகளின் தனிமைப்படுத்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தன்மை நேரடியாகக் கண்காணிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும்.

எவ்வாறிருப்பினும் காவல்துறை கொத்தணி தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தும் பேணுவதற்கு தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.