எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் தமிழர்களை அணுகவில்லை- கலையரசன்

IMG 20201115 143615
IMG 20201115 143615

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

IMG 20201115 143750
IMG 20201115 143750

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் எமது பாதிக்கப்பட்ட போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவிகள் ஆகியோரைக் கருத்திற் கொண்டு எமது பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். எதிர்காலத்தில் எத்தகைய செயற்திட்டங்களை மேற்கொண்டால் எமது வாழ்வாதாரம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது தொடர்பில் அவர்களுடனேயே கலந்துரையாடி இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

நாங்கள் கடந்த காலங்களில் இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொண்டோம். ஆனால் பலரின் ஒத்துழைப்பின்மையால் அச்செயற்பாடுகளை தொடந்தேர்ச்சியாக முன்னெடுக்க முடியமால் போயுள்ளது. அவ்வாறில்லாமல் எதிர்வரும் காலங்களில எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லக் கூடியதாக அமைய வேண்டும்.

பாராளுமன்றம் சென்றதில் இருந்து இதுவரையில் எவ்விதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதற்கான நிதிநிலைமைகள் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் நாங்கள் அதனை மாத்திரம் பார்த்திராமல் எமது மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எமது முயற்சியின் மூலம் கிடைக்கும் வளங்களைக் கொண்டு எமது மக்களுக்கான பணிகளை மேற்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் அடிமைகளாக வாழ்வதையிட்டு மனவேதனை கொள்கின்றோம். அந்த நிலைமை மாற வேண்டும். அதற்கான மாற்றங்களை நாமே முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்த செயற்பாடுகள். எதிர்வருகின்ற காலங்களில் இந்த மாவட்டத்தில் எமது மக்களுக்கு எற்படுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் நானும் எமது தலைமைகள் ஊடாகவும் அரசியற் தலைவர்கள் மற்றும் சர்வதேசம் வரை கொண்டு செல்வதற்கும் தயாராக இருக்கின்றோம். எதற்கும் நாம் தயங்க மாட்டோம்.

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. தற்போது  எமக்காகப் பலர் குரல் கொடுக்க வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை நாங்கள் செய்யப் போகின்றோம் என்று சொல்லி ஒரு போலியான முகவரியுடன் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களால் எமது பிரச்சினை தொடர்பில் எதுவுமே சாதிக்க முடியாது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது மக்கள் நிறையவே அனுபவங்களைப் பெற்றவர்கள்.

எமது முன்னாள் போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் போன்றோர் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் மக்களுக்கு உபதேசம் பண்ண வேண்டியவர்களாவர். எம்மை ஏமாற்றுகின்ற ஏமாளிகள் எமது பிரதேசங்களிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலிலே அவர்களுடைய ஏமாற்று வித்தைகள் எம் மக்கள் மத்தியிலே ஓரளவு பலித்திருந்தது. அது எங்களுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாங்கள் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றோம். எனவே அவ்வாறான விடயங்களுக்குப் பின்னால் எமது மக்கள் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் செல்வதை விடுத்து எமது தேசியப் பயணத்தோடு பயணிக்க வேண்டும்.

நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என்று தெரிவித்தார்.