உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்கிய முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் !

images 1 2
images 1 2

இலங்கையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு சஹ்ரான் ஹாசீமை வழிநடத்தியவர்கள் அடையாளம் காணப்படும் வரை நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (21) சாட்சியளிக்கும்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்படும் வரையில் இந்த விசாரணைகள் பூரணமடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானுக்கும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிய பல்வேறு புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவ்வாறான தொடர்புகள் வெளிப்படவில்லை என்றும் ரவி செனவிரத்ன சாட்சியமளித்துள்ளார்.

சஹ்ரானை வழிநடத்தியவர்கள் அடையாளம் காணப்படும் வரை இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அவர், தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.