கொரோனா மரணங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது -முஜிபுர் ரஹ்மான்

Rahuman
Rahuman

நாட்டில் அண்மையில் பதிவான கொரோனா மரணங்கள் தொடர்பில் நள்ளிரவிலேயே தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் கொரோனா மரணங்களை அரசாங்கம் மறைக்க முற்படுகிறது. இவ்வாறான நிலைமை தொடருமானால் அது நாட்டின் எதிர்காலத்திற்கே பாரிய பாதிப்பாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொரோனா பரவல் ஆரம்பித்த போதே கொழும்பு மாவட்டம் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தியிருந்தோம். 5000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் தடுப்பூசி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பொறுப்பற்ற விதத்திலேயே பதில் கூறுகின்றனர். மக்களை கைவிட்டு அரசாங்கம் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்பட்டு வருகிறது.

அபாயம் மிக்க கொழும்பு நகரில் சுமார் 1000 பி.சி.ஆர். பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கக் கூடிய உபகரண பற்றாக்குறை காணப்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய நாம் அபாய கட்டத்திலேயே இருக்கின்றோம் என்பது தெளிவாகிறது.

பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து விரைவில் தொற்றாளர்களை இனங்கண்டு கொழும்பை முடக்கத்திலிருந்து விடுவிக்குமாறு கோருகின்றோம். அரசாங்கத்தின் கவனயீனத்தினாலேயே  இன்று கொழும்பு  இந்த நிலையை அடைந்துள்ளது. கொரோனாவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு அரசாங்கம் எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை.

பி.சி.ஆர். பரிசோதனைகள் 10 இலட்சத்திற்கும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. கடந்த காலத்தில் நபரொருவருக்கு சுமார் 3 தடவைகள் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கேற்பவே 10 இலட்சம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாறாக பொது மக்களில் 10 இலட்சம் பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்படவில்லை. இதிலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது.

கொரோனா மரணங்கள் தொடர்பிலான செய்திகள் இரவிலேயே வெளியிடப்படுகின்றன. அரசாங்கம் இதனையும் மறைக்க முற்படுகின்றதன் காரணமாகவே இவ்வாறு செயற்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாட்டில் எதிர்காலத்திற்கே பாரிய பாதிப்பாக அமையும் என்றார்.