புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குமாறு கோரி நீதிமன்றில் தமிழ் தேசிய கட்சிகள்வழக்கு தாக்கல் செய்யவேண்டும்-மனோ

625.500.560.350.160.300.053.800.900.160.90 22
625.500.560.350.160.300.053.800.900.160.90 22

புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குமாறு கோரி இலங்கை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யோசனை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுக்கு தெற்கில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புவது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு யோசனையொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் இருக்கின்றது. தெற்கிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றது. குறிப்பாக அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியின் தமது தோழர்களை நினைவுகூருகின்றனர். அதே போன்றதொரு சூழ்நிலையை – சுதந்திரத்தை வடக்கில் உள்ளவர்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஜே.வி.பி. என்பது தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான, சுமந்திரன், விக்னேஸ்வரன், போன்றவர்கள் நீதிமன்றம் சென்று புலிகள்மீதான தடையை நீக்குவதற்கு வழக்கு தாக்கல் செய்யவேண்டும். வெளிநாடுகளில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. இல்லையெனில் இப்பிரச்சினை தொடரும்.

அதேவேளை, புலிகளின் பெயர், கொடி, கொள்கைகள் பற்றி கதைக்காமல் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவுகூரலாம். அது தவறு இல்லை. இதற்குள் அரசியல் திணிக்கப்பட்டால்தான் அது சர்ச்சைக்குரியதாக மாறும். ” – என்றார்.