யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்புவிழா!

image 1509458246 d235b2b891
image 1509458246 d235b2b891

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கி அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்படவுள்ளன.

நவீனமயப்படுத்தப்பட்ட இவ் ஆய்வுகூடங்களின் திறப்புவிழா நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை 10. 30 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியான பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் பற்றரி ஆராய்ச்சியின் திட்ட வரைவின் தரத்தினைக் கருத்தில் கொண்டு உலகவங்கி தனது அபிவிருத்தியை நோக்கிய ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் நான்கு கோடி ரூபா நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளது.

இந்த ஆராய்ச்சி முன்னெடுப்புக்கள் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரையான மூன்று வருட காலத்துக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டமிடப்பட்ட ஆராய்ச்சியினை வசதிப்படுத்துவதற்காக இரண்டு ஆய்வுகூடங்கள் பௌதீகவியல்துறை மற்றும் இரசாயனவியற்துறையில் மறுசீரமைக்கப்பட்டு உயர் தொழில்நுட்ப ஆய்வுகூட உபகரணங்கள் பொருத்தப்பட்ட சர்வதேச தரத்திலான பற்றரி ஆராய்ச்சிக்கான ஆய்வுகூடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தின்கீழ் அதிசெயற்திறன் உடைய கணணிகள், புகைப்படக் கருவிகள், தொடர்பு சாதனங்கள் போன்ற இலத்திரனியல் கருவிகளின் நீண்டகால பாவனைக்கு உகந்த அதே நேரம் உற்பத்திச் செலவும் குறைந்த பற்றரிகளை உருவாக்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போது கணணிகள், புகைப்படக் கருவிகள், தொடர்பு சாதனங்கள் போன்ற இலத்திரனியல் கருவிகளின் நீண்டகால பாவனைக்கு கிடைத்தற்கரிய லித்தியம் மின்பகுபொருள் கொண்ட பற்றரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

யாழ் பல்கலைக்கழகத்தில் திட்டமிடப்பட்டு நடைபெற்றுவருகின்ற ஆராய்ச்சியில் எளிதில் கிடைக்கக்கூடிய சோடியம் மற்றும் மக்னீசியத்தினை பயன்படுத்தி புத்தாக்கமாக பல சவால்களை எதிர்கொண்டு மேம்பாடான உற்பத்திச் செலவு குறைந்த எளிதில் கிடைக்கக்கூடிய பற்றரிகளின் தொழில்நுட்பமானது வடிவமைக்கப்படவுள்ளது.

மேற்படி புத்தாக்கத் தொழில்நுட்பத்திட்டமானது உலகளாவிய பரிமாணம் கொண்டது. அரிசோனா அரச பல்கலைக்கழகம் – அமெரிக்கா, சால்மேர்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம் – சுவீடன், தேசிய விஞ்ஞான நிறுவனம் – கண்டி, விஞ்ஞானபீடம் யாழ் பல்கலைக்கழகம் என்பவற்றின் கூட்டு ஆராய்ச்சித்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களான பௌதீகவியற்துறையைச் சார்ந்த கலாநிதி கந்தசாமி விக்னரூபன், சிவசுப்பிரமணியம் செந்தூரன், மற்றும் இரசாயனவியற்துறையைச் சார்ந்த பேராசிரியர் குகமூர்த்தி வேலாயுதமூர்த்தி, கலாநிதி கணேசலிங்கம் சசிகேஷ் ஆகியோர் இப்புத்தாக்க பற்றரி தொழில்நுட்பத்திற்குரிய ஆராய்ச்சிக்குழுவில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

இவ்வாராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதலில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆறு விஞ்ஞானமாணி பட்டதாரிகள் புத்தாக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முதுவிஞ்ஞானமாணி பட்டப்படிப்புப் பயிற்ச்சியினை பெற்று வளவாளர்களாக மேன்மையடையவுள்ளனர்.