கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க தீர்மானம்

78051292 448269296077649 8710722537085992960 n
78051292 448269296077649 8710722537085992960 n

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை காலமும், கிளிநொச்சி கல்வி வலயம் என இருந்து வந்த ஒரு வலயத்தை இரண்டு கல்வி வலயங்களாக பிரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலயத்தில் இடம்பெற்ற மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள், ஓய்வுப்பெற்ற கல்வி அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆய்வுகள், மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது வரை  காலமும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாகவும் கிளிநொச்சி கல்வி வலயம் என ஒரு கல்வி வலயமாக 104 பாடசாலைகளுடன் 32,028 மாணவர்கள், 2,035 ஆசிரியர்கள், 28 உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகள், என  இயங்கி வருகிறது.

எனவே கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று  நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் முன்னேற்பாடாக மாகாண, மாவட்ட மட்ட உயரதிகாரிகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

அதனடிப்படையில்  கிளிநொச்சி கரைச்சி கல்வி கோட்டத்தை தனியாக ஒரு வலயமாகவும், பளை, பூநகரி, கண்டாவளை ஆகிய மூன்று கல்விக் கோட்டங்களையும் இணைத்து ஒரு வலயமாகவும்   உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக மாணவர்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக கொண்டு இவ்விரண்டு வலயங்கள் உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி கல்வி கோட்டத்தில் 18,323 மாணவர்களும், ஏனைய மூன்று கோட்டங்களிலும் 13,705 மாணவர்களும் தற்போதுள்ளனர்.

மேலும்  பளை, பூநகரி, கண்டாவளை ஆகியவற்றின் மையப்பகுதியான பரந்தன் பகுதியில் புதிய  வலயக் கல்வி அலுவலகம் ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றையக் இக்கூட்டத்திற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர் , கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர்  கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஓய்வுப்பெற்ற  வலயக் கல்விப்பணிப்பாளர்கள், கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.