லீசிங் பணத்தை செலுத்த தவறியவர்களின் வாகனங்களை அபகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை!

15 946x1024 1
15 946x1024 1

வவுனியாவில் லீசிங் நிறுவனத்தில் வாகனங்களை பெற்றுக்கொண்டவர்கள் நிலுவையிலுள்ள தமக்கான தவணைப்பணத்தை செலுத்துமாறு கோரி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று நெருக்குதல்களை வழங்கி வருவதாகவும் பணம் செலுத்தாவிட்டால் வாகனங்களை பறிமுதல் செய்துகொள்ள போவதாகவும் அச்சுறுத்தி வருவதாக லீசிங் நிறுவனங்கள் சிலவற்றில் வாகனங்களை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளதுடன் தமக்கான சலுகைகளை அரசாங்கம் நீடித்து வழங்க வேண்டும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளனர் .

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கும் போது ,

ஒரு சில லீசிங் நிறுவனங்களில் பாரஊர்த்தி , பேருந்து , வான் , முச்சக்கரவண்டிகள் என்பனவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழ் நிலைகள் காரணமாக வாகனங்களில் பயணிப்பவர்கள் , சுற்றுலாப்பயணிகள் எனப்பலரும் தமது பயணங்களை தவிர்த்துக்கொண்டனர் .

பல பிரதேசங்கள் முடக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் எமக்கான தொழில் சீராக இடம்பெறுவதில்லை இதனால் தவணைப்பணத்தை செலுத்துவதற்கு தாமதங்கள் ஏற்பட்டு வருகின்றது .

பயணிகளை எதிர்பார்த்து தொழில்களை மேற்கொண்டு வரும் வான் , முச்சக்கரவண்டிகள் , பேருந்துகள் , பாரஊர்திகள் போன்றவற்றை லீசிங் நிறுவனங்களில் தவணை முறையில் பெற்றுக்கொண்ட நாங்கள் வருமானங்களை இழந்து லீசிங் தவணைப்பணத்தை பகுதியளவில் செலுத்தி வருகின்றோம் இருந்தும் குறித்த நிறுவனங்களினால் மிகுதி நிலுவையாக உள்ள தவணைப்பணங்களை செலுத்துமாறும் அவ்வாறு செலுத்தத்தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்யவுள்ளதாகவும் வீடுகளுக்கு வந்து நிறுவனத்தின் பணியாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் .

எம்மால் இயன்ற பணத்தை செலுத்துவதற்கும் அனுமதியளிப்பதுடன் வரி அனுமதிப்பத்திரம் , காப்புறுதிப்பத்திரம் என்பனவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும் குறித்த நிறுவனங்கள் வாகனங்களின் ஆவணங்களை வழங்கவும் மறுத்து வருகின்றன . இதனால் தொழில் ரீதியாகவும் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் .

எமக்கு அரசாங்கம் சலுகை அடிப்படையில் ஒரு திட்டத்தை முன்வைக்குமாறும் வாகனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறும் மேலும் தெரிவித்துள்ளனர் .

இது குறித்து குறித்த நிறுவனத்தின் முகாமையாளருடன் தொடர்புகொண்ட கேட்டபோது , அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சில காலங்கள் தவணைப்பணம் செலுத்துவதற்குரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டு முடிவடைந்துவிட்டன. இருந்தும் அதிக விலைகளில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் தவணைக்கட்டண நிலுவைகள் பெரும் தொகையாகவும் காணப்படுகின்றது

நீண்டகாலமாகியுள்ளது. இதனால் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது எனவே கால அவகாசம் வழங்கப்பட்டு நிறைவடைந்தவர்களிடம் எமது நிறுவனங்களின் சட்ட திட்டங்கள் ஆலோசனைகளுக்கு அமைவாக நாங்கள் செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார் .