எம்மை பிரிவினைவாதிகளாக, இனவாதிகளாக ,பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள்- நா.உ கோவிந்தன்!

DSC04588 720x450 1 1
DSC04588 720x450 1 1

எமது மக்கள் சார்ந்த, அவர்களின் தேவைகள் சார்ந்த அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி, இவர்களை நாடாளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டுமென இந்த சபையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உற்பட பலரும் உரையாற்றுகின்றீர்கள், இது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எம்மை பிரிவினைவாதிகளாக, இனவாதிகளாக ,பயங்கரவாதிகளாக பார்க்காதீர்கள். எமது சார்ந்த, எமது பிரதேசம் சார்ந்த ,எமது மக்கள் சார்ந்த, அவர்களின் தேவைகள் சார்ந்த அவர்களின் வாழ்வுரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தால் எம்மை பிரிவினைவாதி, இனவாதி,பயங்கரவாதி, இவர்களை நாடாளுமன்றத்திலிருந்து அகற்ற வேண்டுமென இந்த சபையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் உற்பட பலரும் உரையாற்றுகின்றீர்கள், இது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது .இது உங்களின் அறியாமையா என சந்தேகப்படத் தோன்றுகின்றது.

தயவு செய்து உலக விடுதலைப்போராட்ட நாயகர்களின் வரலாற்றை இதய சுத்தியோடு உங்கள் அறிவுக்கண் திறந்து நோக்குங்கள். ஆயுதப்புரட்ச்சி மூலம் மக்கள் விடுதலையை நாடிய எத்தனையோ தலைவர்கள் காலப்போக்கில் ஜனநாயக வழி வந்தமையே உலக வரலாறு.

உதாரணத்துக்கு நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத், ஹசன் டி டீரோ ஆகியோரைக் குறிப்பிட முடியும். எமது நாட்டில் கூட 1971 இல் ஆயுதம் தூக்கி பின்னர் ஜனநாயகவழி வந்த ஜே.வி.பி.யினரை அன்று பயங்கரவாதிகள் என்றே அழைத்தனர். இன்று அவர்கள் மீது அப்படி ஒரு வார்த்தை பிரயோகத்தை நீங்கள் எவரும் பிரயோகிப்பதில்லை.

ஆனால் ஆயுதமேந்தி பின்னர் ஆயுதத்தைக் கைவிட்டு வாக்குரிமை மூலம் இந்த உயரிய சபைக்கு வந்து நாம் உரையாற்றும்போது எம் மீது மட்டும் ஏன் உங்கள் குரோதம்? ஓர வஞ்சனை? ஏன் உங்கள் கண் மூடிய பார்வை? உங்கள் மனக்கதவை திறவுங்கள், உண்மையை உணருங்கள். என்றார்.