கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று!

download 47

கொவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

எஸ்.சி.எப்.ஆர். 109 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளை அவசர தேவையாக கருதி உடன் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை அடுத்து அந்த மனு  கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தது. 

இதன்போது அம்மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரகாம். சுமந்திரன் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப் மற்றும் ஏர்மிசா ரீகல் ஆகியோருடன் ஆஜரானார். 

இந் நிலையிலேயே இம்மனு தொடர்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள வைத்தியர் சன்ன பெரேரா சார்பில் மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ  ஜயவர்தன சுய தனிமைபப்டுத்தலில் இருப்பதாக, அவரது கனிஷ்ட சட்டத்தரணி  மன்றில் விடயங்களை தெளிவுபடுத்தினார். 

அதன் பிரகாரமே குறித்த மனு உள்ளிட்ட, கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரும் 11 மனுக்களையும்  இன்று விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான  புவனேக அலுவிஹார,  சிசிர டி ஆப்றூ மற்றும் காமினி அமரசேகர  ஆகியோர் முன்னிலையில் இம்மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா உள்ளிட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 மனுக்கள் இதன்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.