பிரபல ஓட்டப்பந்தய வீரருக்கு கொரோனா!

5s2gho1g milkha singh afp 625x300 20 May 21
5s2gho1g milkha singh afp 625x300 20 May 21

‘பறக்கும் சீக்கியர்’ என்று வர்ணிக்கப்படும் இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். 1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டவரான அவர் சண்டிகாரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 91 வயதான மில்கா சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மில்கா சிங் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் உதவியாளராக இருக்கும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். இதில் எனக்கு மட்டும் தொற்று இருப்பது தெரியவந்தது. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். காய்ச்சல், சளி எதுவுமில்லை. 3-4 நாட்களில் நான் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவேன் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். நேற்று கூட ஓட்ட பயிற்சி மேற்கொண்டேன். நல்ல உத்வேகத்துடன் இருக்கிறேன். நாட்டு மக்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள். எனக்கு வயது 91. ஆனாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன்’ என்றார். தற்போது துபாயில் இருக்கும் மில்கா சிங்கின் மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் நாளை நாடு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.