பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகல்!

image 2021 06 01 225423
image 2021 06 01 225423

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் முதல் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என பிரெஞ்சு ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.