டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

2021 06 23T073500Z 243174215 RC276O9SJU4S RTRMADP 3 OLYMPICS 2020 TIMELINE
2021 06 23T073500Z 243174215 RC276O9SJU4S RTRMADP 3 OLYMPICS 2020 TIMELINE

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கான கடுமையான புதிய சுகாதார வழிகாட்டல்களை அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியை நேரில் பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பார்வையாளர்களை நேரில் பார்வையிட அனுமதிக்கலாமா? என்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டது.

கடந்த திங்களன்று போட்டிகள் நடைபெறும் அரங்கங்களில் இருக்கைகளில் 50 சதவீதம் அளவுக்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்க்க ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைப்பாளர்கள் கூறினர்.

இந் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கான கடுமையான புதிய சுகாதார வழிகாட்டல்களை அமைப்பாளர்கள் புதனன்று வெளியிட்டுள்ளனர்.

டோக்கியோ விளையாட்டு அமைப்பின் குழுவின் தலைவரான சீகோ ஹாஷிமோடோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“நிபுணர்களின் ஆலோசனையை” பின்பற்றி விளையாட்டு அரங்குகளில் மதுபானம் விற்பனையை தடை செய்ய அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், நிகழ்வு அணுசரணையாளரான ஆசாஹி ப்ரூவரிஸ் இந்த முடிவுக்கு உடன்பட்டதாகவும் கூறினார்.

அரங்கிற்குள் நுழையும் பார்வையாளர்கள் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்பதுடன் அவர்கள் வெப்பநிலை பரிசோதனையையும் எதிர்கொள்ள வேண்டும். இதன்போது அதிக வெப்பநிலை அல்லது வேறு ஏதேனும் கொவிட் அறிகுறிகளைக் வெளிப்படுத்தும் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன் நுழைவுச் சீட்டுக்கான பணத்தையும் திரும்பப் பெற மாட்டார்கள்.

ஜப்பானின் கோடை வெப்பம் காரணமாக, பார்வையாளர்களுக்கு இடையில் இரண்டு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்ய முடிந்தால் பார்வையாளர்கள் தங்கள் முகக் கவசங்களை வெளிப்புற இடங்களில் அகற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் ஏனையவர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கும், சத்தமாக உற்சாகப்படுத்துவதற்கும், அரவணைப்புகளை மேற்கொள்ளவும், சியர்ஸ் செய்யவும், வீரர்களிடமிருந்து ஆட்டோகிராப் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்களது அனுமதிச் சீட்டு தரவுகளை தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.