இலங்கையை வீழ்த்தி தொடரில் சமநிலையில் தென்னாபிரிக்கா!

south africa
south africa

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வெத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆர். பிரேமதாஸ அமைதானத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணத்தால் போட்டி தாமதிக்கப்பட்டது.

இதனையடுத்து அணிக்கு 47 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில், மாலன் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 121 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், இலங்கை அணி 47 ஓவர்களில் 284 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இலங்கை அணி 25 ஓவர்களுக்கு 114 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதன் பின்னர் டக்வெத் லூயிஸ் முறையில் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணியின் வெற்றியிலக்கு 265 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 67 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதனால் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் சரித் அசலன்க 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 77 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.