14 தடவைகள் நோ – போல் வீசிய பென் ஸ்டொக்ஸ்: நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை

sppooooo 3
sppooooo 3

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி பிரிஸ்பேனில் நேற்று ஆரம்பமானது.

அதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பாட களமிறங்கியபோது, மழை குறுக்கிட்டதால் முதல் நாள் போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

இதையடுத்து, 2 ஆம் நாள் போட்டி இன்று தொடங்கியது. தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 196 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் வீசிய செல்லுபடியற்ற பந்துவீச்சு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அவர் ஒரே ஓவரில் 4 முறை செல்லுபடியற்ற பந்துவீச்சை மேற்கொண்டதாகவும், அதில் இரண்டுதடவை மட்டுமே நடுவர் சைகை காண்பித்ததாகவும், ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.

எனினும், இதற்கடுத்து சமூக வலைதளங்களில் வெளியான காணொளி காட்சிகளில் பென் ஸ்டோக்ஸ் மொத்தமாக 14  செல்லுபடியற்ற பந்துவீச்சுகளை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதில் இரண்டு முறை மட்டுமே நடுவர் நோ – போல் சைகை வழங்கியுள்ளார். புதிய நடைமுறைகளின்படி செல்லுப்படியற்ற பந்துவீச்சுகளை மூன்றாவது நடுவரே அவதானிக்க வேண்டும்.

ஆனால் முன் காலைக் கோட்டுக்கு வெளியே வைத்து வீசப்படும் செல்லுப்படியற்ற பந்துவீச்சுகளை கணிக்கும் தொழில்நுட்பத்தில் போட்டி ஆரம்பத்துக்கு முன்னதாகவே பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டமிழப்பை ஏற்படுத்தும் பந்து வீச்சு செல்லுப்படியானதா என்பதை அவதானிக்க பழைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.